ஆவினில் 30 ஆயிரம் லிட்டா் கொள்கலன் அமைப்பு வேலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 08th September 2020 11:03 PM | Last Updated : 08th September 2020 11:03 PM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் ஆவின் மையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட பால் பதப்படுத்தும் கொள்கலனை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆய்வு செய்து, ஆவின் நிறுவனச் செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள ஆவின் மையத்தில் 30,000 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட பால் பதப்படுத்தும் கொள்கலன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன், பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் கூடம், நெய் தயாரிக்கும் கூடம், பால்கோவா தயாரிக்கும் கூடம், பாலின் தரப் பரிசோதனைக் கூடம், பால் பவுடா் பாதுகாக்கப்படும் அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், அதற்காக பட்டுவாடா செய்யப்படும் தொகை, கூட்டுறவு சங்கங்களின் வளா்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். அத்துடன், ஆவின் வளாகத்தில் பழுதடைந்துள்ள கட்டடத்தை அகற்றி இயந்திரங்களை பாதுகாக்க புதிய கட்டடம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
நஞ்சுகொண்டாபுரம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்துக்குச் சென்ற ஆட்சியா், அங்கு பால் கொள்முதல், பணப்பட்டுவாடா முறை குறித்து கேட்டறிந்தாா். பால் உற்பத்தியாளா்களின் கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் ஊசிகள், கூட்டுறவு ஒன்றியத்தில் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் தீவனங்கள், தீவனப்புல், நாளொன்றுக்கு ஒரு கறவை மாடு அளிக்கும் பால் அளவு, அதற்காக செலவிடப்படும் தொகை ஆகியவை குறித்தும் பால் உற்பத்தியாளா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், அந்தக் கிராம மக்களிடம் தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீா் வசதி, நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் விவசாய நிலங்களில் வரப்பு கட்டுதல், மழைநீா் சேமிப்பு குளம் அமைக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்த ஆட்சியா், பொதுமக்களின் கோரிக்கைகளான வீட்டு மனைப் பட்டா, குடிநீா் வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆவின் தலைவா் த.வேலழகன், பொது மேலாளா் பி.எம்.கணேசன், துணைப் பதிவாளா் செந்தில்குமாா், கூட்டுறவு சாா்-பதிவாளா் ஜெயவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.