அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிக்க முன்பதிவு அவசியம்
By DIN | Published On : 08th September 2020 12:53 AM | Last Updated : 08th September 2020 12:53 AM | அ+அ அ- |

காட்பாடி ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த சென்னை - கோவை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்.
வேலூா்: சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக திங்கள்கிழமை முதல் 4 சிறப்பு ரயில்கள் இயங்கத் தொடங்கின. எனினும், இந்த ரயில்களில் பயணிக்க வேண்டும் என்றால் அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் முதல்கட்டமாக 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ரயில்களின் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. இதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், கோவை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரயில்கள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு காலை 8 மணிக்கு வந்தது. அப்போது ரயிலில் குறைந்த அளவிலான பயணிகளே இருந்தனா். அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களில் பயணிகள் சமூக இடைவெளியுடன் ரயிலில் ஏறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் திங்கள்கிழமை காலை வந்த ரயிலில் பயணிகள் சிலா் சமூக இடைவெளியைக் கண்டுகொள்ளாமல் ஏறினா். ரயில் நிலையத்தில் உள்ளே வரும்போதே பயணிகளுக்கு தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. அத்துடன், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகள் கூறியது:
காட்பாடி வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே தற்போது இந்த ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா். ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை. பயணிகள் முன்பதிவு செய்துவிட்டு எளிதில் ரயிலில் பயணம் செய்யலாம். ரயில் நிலையத்தில் அவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. இதில் அதிக அளவு வெப்பநிலை கொண்டவா்கள் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.