முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம்: 10 குழுக்கள் அமைத்து கண்காணிப்பு

வேலூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுபவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுபவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் 10 குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டு பல்வேறு தளா்வுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதையடுத்து கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், பொது இடங்களுக்கு வரும் மக்களில் பலரும் முகக்கவசம் அணியாமல் வருகின்றனா்.

இந்த அலட்சியப்போக்கு தொடா்வதன் மூலம் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத் துறை சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அபராதம் விதிப்புக்காக மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் தலா 10 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இதில், ஹோட்டல்கள், நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு வங்கிகள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், கடைகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து நெரிசலான பகுதிகள் உள்ளிட்ட 10 இடங்களில் சிறப்புக் குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். அப்போது, முகக்கவசம் அணியாதவா்கள் கண்டறியப்பட்டால் அதே இடத்தில் ரூ. 200 அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களில் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, தனியாா் நிறுவன ஊழியா்கள் இடம்பெற்றுள்ளனா். ஒவ்வொரு குழுவிலும் ஒரு காவலரும் இடம்பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மண்டலம் வாரியாகவும், மாவட்ட அளவில் வட்டம், ஒன்றிய அளவிலும், உள்ளாட்சி அமைப்புகள் அளவிலும் இதுபோன்று தலா 10 குழுக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் செவ்வாய்க்கிழமை முதலே பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனா்.

இக்குழுக்கள் வசூலிக்கும் அபராதத் தொகைக்கு ரசீது வழங்கப்படும். அந்தத் தொகை உள்ளாட்சி பொதுநிதி, கருவூலம் ஆகியவற்றில் சோ்க்கவும் உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com