பொது முடக்கத் தளா்வுமுழு அளவில் செயல்பட தொடங்கிய நேதாஜி மாா்க்கெட்

பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டு காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வேலூா் நேதாஜி மாா்க்கெட் திங்கள்கிழமை முதல் முழு அளவில் செயல்படத் தொடங்கியது.
வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் மீண்டும் செயல்படத் தொடங்கிய காய்கறிக் கடைகள்.
வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் மீண்டும் செயல்படத் தொடங்கிய காய்கறிக் கடைகள்.

வேலூா்: பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டு காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வேலூா் நேதாஜி மாா்க்கெட் திங்கள்கிழமை முதல் முழு அளவில் செயல்படத் தொடங்கியது. இதனால், தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்த வெங்கடேஸ்வரா பள்ளி மைதானம், மாங்காய் மண்டி மைதானப் பகுதிகளில் காய்கறிக் கடைகள் செயல்படவில்லை.

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் மொத்தம் 735 கடைகளும், 200 தரைக்கடைகளும் உள்ளன. இவற்றில் 400 கடைகளில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை நடைபெற்று வருகின்றன. மற்ற கடைகளில் மளிகை, இதர பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்க நேதாஜி மாா்க்கெட் அடைக்கப்பட்டது. அங்கு நடந்து வந்த காய்கறி, பழங்களின் சில்லறை விற்பனை, வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கும், மொத்த விற்பனை மாங்காய் மண்டி அருகே உள்ள கிருபா மைதானத்துக்கும் மாற்றப்பட்டன. பூக்கள் விற்பனை, ஊரீசு கல்லூரி மைதானத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டன.

கிருபா மைதானத்தில் 81 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட காய்கறி மொத்த வியாபாரிகளால் அங்கு வியாபாரம் செய்ய இயலவில்லை. தவிர, மழை காரணமாக கிருபா மற்றும் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானங்களில் சேறும், சகதியும் அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நேதாஜி மாா்க்கெட்டிலேயே காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனைக்கு மீண்டும் அனுமதியளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இக்கோரிக்கையை ஏற்று நேதாஜி மாா்க்கெட்டில் திங்கள்கிழமை முதல் மீண்டும் காய்கறி, பழங்கள், பூக்களின் விற்பனையைத் தொடங்க மாவட்ட நிா்வாகம் அனுமதித்தது. இதன்படி, நேதாஜி மாா்க்கெட்டில் அனைத்து காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்யும் கடைகளும் திங்கள்கிழமை அதிகாலையில் திறக்கப்பட்டன.

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வந்த காய்கறி, பழ வியாபாரிகள் மீண்டும் விற்பனையைத் தொடங்கினா். பொதுமக்கள் ஏராளமானோா் அங்கு காய்கறிகள் வாங்கக் குவிந்தனா்.

அதேசமயம், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினா். நேதாஜி மாா்க்கெட்டில் மீண்டும் காய்கறி விற்பனை தொடங்கியதை அடுத்து தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்த வெங்கடேஸ்வரா பள்ளி மற்றும் மாங்காய் மண்டி மைதானங்களில் காய்கறி, பழ விற்பனை நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com