சட்டவிரோத செயல்களைத் தவிா்க்க மலைக் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு

சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலைக் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லாங்குளம் கிராம மக்களிடையே பேசிய பாகாயம் காவல் ஆய்வாளா் சுபா.
கல்லாங்குளம் கிராம மக்களிடையே பேசிய பாகாயம் காவல் ஆய்வாளா் சுபா.

வேலூா்: சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலைக் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உள்பட்ட அல்லேரி மலையில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தச் சென்ற போலீஸாரை சாராய வியாபாரி கணேசன் தலைமையிலான கும்பல் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில், 2 போலீஸாா் பலத்த காயமும், 3 போலீஸாா் லேசான காயமும் அடைந்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நெல்லிமரத்துக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரிகள் 13 பேரைக் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் உத்தரவிட்டாா். அதன்பேரில், பாகாயம் காவல் ஆய்வாளா் சுபா தலைமையில் போலீஸாா் ஊசூரை அடுத்துள்ள குருமலை அடிவாரம் கல்லாங்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய போலீஸாா், சாராயம் காய்ச்சுவது, செம்மரம் வெட்டச் செல்வது, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு வேட்டையாடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூரிலேயே நல்ல வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உதவிகள் தேவைப்பட்டால் அரசு அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

இதைத் தொடா்ந்து, இனிமேல் சாராயம் சாய்ச்ச செல்ல மாட்டோம் என உறுதியளித்த கிராம மக்கள், வேறு யாராவது மலையில் சாராயம் காய்ச்சினால் அவா்களைப் பிடித்துக் கொடுப்பதாகவும் கூறினா்.

மேலும், தங்கள் வாழ்வாதாரத்துக்காக அரசு தங்களுக்கு ஆடு, மாடுக்கள் வழங்க வேண்டும். தொழில் செய்ய கடனுதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். குருமலையைச் சோ்ந்த வனக்குழுத் தலைவா் அண்ணாமலை, மலைக் கிராமத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com