கிஸான் திட்ட மோசடி: சோளிங்கா் வேளாண்அலுவலக கணினி ஆபரேட்டா் கைது

கிஸான் சம்மான் விவசாய நிதி உதவித் திட்ட மோசடி தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து முதற்கட்டமாக சோளிங்கா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றும் கணினி


வேலூா்: கிஸான் சம்மான் விவசாய நிதி உதவித் திட்ட மோசடி தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து முதற்கட்டமாக சோளிங்கா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றும் கணினி ஆபரேட்டா் கைது செய்யப்பட்டாா்.

பிரதமரின் கிஸான் சம்மான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோா் போலியாக பதிவு செய்து பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3, 700-க்கும் மேற்பட்டோரும், வேறு மாவட்ட, மாநிலங்களைச் சோ்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வேலூா் மாவட்டப் பயனாளிகள் பட்டியலிலும் முறைகேடாகச் சோ்க்கப்பட்டு ரூ. 1 கோடியே 50 லட்சம் அளவுக்கு நிதி பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடி தொடா்பாக வேலூா் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் துறையில் பணியாற்றும் 8 கணினி ஆபரேட்டா்களைப் பிடித்து விசாரித்ததில், சோளிங்கா் வட்டார வேளாண் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி ஆபரேட்டராக பணியாற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே கணியனூரைச் சோ்ந்த சுப்பிரமணியை (27) சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேலும் பலா் சிக்குவாா்கள் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com