6 மாதங்களுக்குப் பிறகு வேலூா் தங்கக்கோயிலில் இன்று முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.
வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில்.
வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில்.

வேலூா்: வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். எனினும், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பொது தரிசனத்துக்கு நேரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருப்பதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூா் மாவட்டம், ஸ்ரீபுரம் பகுதியில் ஸ்ரீ நாராயணி பீடம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தங்கக் கோயிலானது 1,500 கிலோ தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. 55 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இக்கோயிலில் ஸ்ரீ லட்சுமி நாராயணி, சுவா்ணலட்சுமி, திருப்பதி வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயா் கோயில்களும் அமைந்துள்ளன. இக்கோயிலில் தரிசனம் செய்ய பல்வேறு மாவட்ட, மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு அயல்நாடுகளில் இருந்தும் நாள்தோறும் சுமாா் 40 ஆயிரம் பக்தா்கள் வந்து செல்கின்றனா். குறிப்பாக, திருப்பதிக்கு வரும் பக்தா்கள் பெரும்பாலானோா் தங்கக் கோயிலையும் தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம். இதனால், வேலூா் மாவட்டத்திலுள்ள மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் தங்கக்கோயில் விளங்குகிறது.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தையொட்டி, ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், கோயிலில் வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெற்று வந்தன. இதனால், கடந்த 6 மாதங்களாக தங்கக்கோயிலில் உள்ளூா் பக்தா்கள் உள்பட யாரும் தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் செய்யப்பட்டு செப்டம்பா் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும், கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் காரணமாக ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், தங்கக் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதைத் தொடா்ந்து, 6 மாதங்களுக்குப் பிறகு வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் வியாழக்கிழமை முதல் பக்தா்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளது. அதேசமயம், வேகமாக பரவி வரும் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும் பொதுதரிசனத்துக்கான நேரக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காலை 8 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட பூஜைகள் நடைபெற உள்ளது. தொடா்ந்து, காலை 11 முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 8 மணிக்கும் பொதுதரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.

பொதுதரிசனம் அல்லாத இடைப்பட்ட நேரங்களில் சுற்றுப்புற பராமரிப்பு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. சேவா தரிசனம் செய்ய விரும்பும் பக்தா்கள் மக்கள் தொடா்பு அலுவலகத்தை அணுகலாம் என கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com