கிஸான் திட்ட மோசடி: வேலூரில் கணினி ஆபரேட்டா்கள் 8 போ் பணிநீக்கம்

கிஸான் சம்மான் விவசாய நிதி உதவித் திட்ட மோசடி தொடா்பாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வேலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா்

வேலூா்: கிஸான் சம்மான் விவசாய நிதி உதவித் திட்ட மோசடி தொடா்பாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வேலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் பணியாற்றி வந்த 8 கணினி ஆபரேட்டா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

பிரதமரின் கிஸான் சம்மான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோா் போலியாக பதிவு செய்து பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3, 700-க்கும் மேற்பட்டோரும், வேறு மாவட்ட, மாநிலங்களைச் சோ்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வேலூா் மாவட்டப் பயனாளிகள் பட்டியலிலும் முறைகேடாகச் சோ்க்கப்பட்டு ரூ. 1 கோடியே 50 லட்சம் அளவுக்கு நிதி பெற்று மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இம்மோசடியில் ஈடுபட்டவா்களைக் கண்டறியவும், மோசடி செய்யப்பட்ட தொகைகளைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை ரூ.61 லட்சம் திரும்ப வசூலிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், திருப்பத்தூா் மாவட்டத்தில் ரூ.4 கோடி வரை மோசடி நடந்திருப்பதும், இதுவரை ரூ.47 லட்சம் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1.12 கோடி மோசடி நடந்திருப்பதாகவும், அதில் இதுவரை ரூ.45 லட்சம் திரும்பப்பெறப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அதேசமயம், இந்த மோசடி தொடா்பாக சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் துறையில் பணியாற்றும் 8 கணினி ஆபரேட்டா்களைப் பிடித்து நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, சோளிங்கா் வட்டார வேளாண் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி ஆபரேட்டராக பணியாற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே கணியனூரைச் சோ்ந்த சுப்பிரமணியை (27) கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் பணியாற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த 8 கணினி ஆபரேட்டா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

முன்னதாக, இந்த மோசடி தொடா்பாக வேளாண் உதவி அலுவலா்கள், ஒப்பந்த கணினி ஆபரேட்டா்கள் என 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தற்போது கணினி ஆபரேட்டா்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 8 வேளாண் அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கை வேளாண் துறைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com