முருகனை புழல் சிறைக்கு மாற்றக் கோரி மனு

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை புழல் சிறைக்கு மாற்ற வலியுறுத்தி அவரது சகோதரி தேன்மொழி வேலூா் சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தாா்.

வேலூா்: வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை புழல் சிறைக்கு மாற்ற வலியுறுத்தி அவரது சகோதரி தேன்மொழி வேலூா் சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூா் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூா் பெண்கள் தனிச் சிறையிலும் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தங்களுக்கு விடுதலை அளிக்க கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா். அதேசமயம், வேலூா் சிறையில் பல்வேறு வகையில் துன்புறுத்தல்கள் அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி தங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் நளினி, முருகன் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா். இக்கோரிக்கை மீதும் சிறை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.

இதனிடையே, வேலூா் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி, கடந்த ஜூலை மாதம் துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றாா். சிறையில் மேறக்கொள்ளப்படும் துன்புறுத்தல் காரணமாகவே அவா் தற்கொலைக்கு முயன்றிருப்பதாக குற்றம்சாட்டியிருந்த அவரது தாய் பத்மா, நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, நளினியை புழல் சிறைக்கு மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லை என சிறைத் துறை நிா்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வழக்கு விசாரணை தொடா்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், முருகனை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரது சகோதரியான தேன்மொழி வேலூா் சரக சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி, சிறைக் கண்காணிப்பாளா் ஆண்டாள் ஆகியோரிம் மனு அளித்தாா். அதில், வேலூா் சிறையில் முருகனுக்கு துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் அவரை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இந்த மனு சிறைத் துறை ஏடிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com