வேளாண் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அதை ரத்து செய்யக் கோரியும் வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக விவசாயிகள் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அதை ரத்து செய்யக் கோரியும் வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக விவசாயிகள் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விவசாயிகளுக்கான உற்பத்தி, வணிக மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

விவசாயத்தையும், விவசாயிகளையும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நாடு தழுவிய அளவில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் சி.எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தாா். எஸ்.ஏ.சிம்புதேவன் (ஏஐடியுசி), எம்.பி.ராமச்சந்திரன் (சிஐடியு), எகலவன் (வாலிபா் சங்கம்), கே.லோகேஷ்குமாா் (விவசாயிகள் சங்கம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசின் இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அவற்றை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து தலைமை தபால் நிலையம் முன்பு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 20 பெண்கள் உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com