வடகிழக்கு பருவமழை: 34 இடங்களில் வெள்ள பாதிப்பு அபாயம்; வேலூா் ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 29th September 2020 10:52 PM | Last Updated : 29th September 2020 10:52 PM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் உள்ளிட்டோா்.
வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் 34 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.
வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசியது:
வடகிழக்கு பருவமழையால் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இயல்பாக 364.5 மி.மீ மழை பெய்ய வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டில் 273.06 மி.மீ அளவிலேயே மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 26 சதவீதம் குறைவானதாகும். வழக்கமாக வேலூா் மாவட்டத்துக்கு வடகிழக்கு பருவமழையால் மட்டுமே அதிகளவில் மழை பொழிவு இருக்கும்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் பெய்த மழையைக் கணக்கில் கொண்டு இம்மாவட்டத்தில் மொத்தம் 34 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், மிதமாக பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக 11, குறைவாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 23 உள்ளன. அதிக, மிகஅதிக அளவில் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் ஏதும் கண்டறியப்படவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கான 180 முதல்நிலைப் பொறுப்பாளா்கள் கண்டறியப் பட்டுள்ளனா். தவிர, மழைக் காலங்களில் விழும் மரங்களை அகற்றவும், கோடை காலங்களில் மரங்கள் நடுவதற்கும் 112 முதல்நிலை பொறுப்பாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். மகளிா் சுய உதவிக் குழுக்களில் இருந்து 69 பெண் முதல்நிலைப் பொறுப்பாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். இயற்கை இடா்பாடுகளால் கால்நடைகள் பாதிக்கப்படாத வகையில் 137 கால்நடைகளுக்கான சிறப்பு முதல்நிலைப் பொறுப்பாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.
இவா்கள் தவிர பல்வேறு துறை அலுவலா்கள் அடங்கிய வட்ட அளவிலான 6 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலா ஒரு துணை ஆட்சியா் தலைமையில் வருவாய், ஊரக வளா்ச்சி, வேளாண்மை, தோட்டக்கலை, மின்சாரம், பொது சுகாதாரம் உள்ளிட்ட 11 துறை சாா்ந்த அலுவலா்களை இந்த மண்டலக் குழுக்கள் செயல்படும். பருவமழைக் காலத்தில் ஏற்படும் இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீட்பு, சீரமைப்புப் பணிகளை இந்த குழுக்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறையினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சி.மாலதி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.