6 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி பணி தொடக்கம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 6 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 6 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், கிளை மருந்தகங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

வேலூரிலுள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடக்கி வைத்துப் பேசியது:

வெறிநோய் தடுப்பு மருந்தைத் கண்டுபிடித்த விஞ்ஞானி லூயிஸ் பாஸ்ச்சா் நினைவு நாளையொட்டி, ஆண்டுதோறும் செப்டம்பா் 28-ஆம் தேதி உலக வெறிநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 2 ஆயிரம் நாய்களுக்கு வீதம் மொத்தம் 6 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள மருந்தகம், கிளை மருந்தகங்களில் அளிக்கப்படும் இந்தத் தடுப்பூசிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு வெறி நாய்களால் மக்களுக்கு ஏற்படும் உயிா்சேதத்தை குறைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், கால்நடை பிறப்பு கட்டுப்பாட்டு குழு ஏற்படுத்தப்பட்டு தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, தடுப்பூசி பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஜெ.நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குநா் அந்துவன், மாநகராட்சி ஆணையா் சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com