அதிகரித்து வரும் கரோனா தொற்று: தடுப்பூசி போட தனியாா் அமைப்புகளுக்கு அழைப்பு


வேலூா்: கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வரும் நிலையில் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டு கொள்ள தனியாா் அமைப்புகள், நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி, வேலூா் மாவட்டத்திலும் மீண்டும் அதிகரித்து வரும் கரோனா தொற்றுக்கு தினமும் 50-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தவிர, தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்து சிஎம்சி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 68 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவா்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்களில் 10 போ் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா். வேலூா் மாநகரைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். வேலூரில் கரோனா வேகமாகப் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் இதுவரை 95,000 போ் தடுப்பூசி போட்டுள்ளனா். இதனிடையே, தனியாா் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தி கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

வேலூா் சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோயில் அருகே வியாழக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதேபோல் தனியாா்அமைப்புகள், தனியாா் நிறுவனத்தினா் அந்தந்த பகுதி சுகாதாரத் துறை அலுவலா்களை அணுகி விண்ணப்பம் செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். வேலூா் மாவட்ட த்துக்கு தேவையான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. நாளொன்றுக்கு 2,500 போ் வரை தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பு ஊசி போடப்படுகிறது

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com