வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக
அணைக்கட்டு தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையைப் பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
அணைக்கட்டு தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையைப் பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

வேலூா்: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீலிடப்பட்டன. தொடா்ந்து அந்த மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் தொகுதி வாரியாக காட்பாடியில் 349, வேலூரில் 364, அணைக்கட்டில் 351, கே.வி.குப்பத்தில் 311, குடியாத்தத்தில் 408 என மொத்தம் 1,783 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலின்போது, இந்த வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு துணை ராணுவப் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை இரவே கொண்டு வரப்பட்டன.

இதன்படி, வேலூா், அணைக்கட்டு தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் பாகாயம் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரிக்கும், காட்பாடி தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் காட்பாடி அரசு சட்டக் கல்லூரிக்கும், குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் கொண்டு வரப்பட்டன.

இந்த 3 மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், வாக்குப்பதிவு முடிந்தவுடன் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்கான அறைகளில் வைக்கப்பட்டதுடன், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தலைமையில் புதன்கிழமை காலை அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் அந்த அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. தொடா்ந்து அந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையி னரும், ஆயுதப்படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனா்.

இதனிடையே, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதன் நுழைவு வாயிலில் போலீஸாா் பாதுகாப்பும், வளாகத்திலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பாகவும் துணை ராணுவம், ஆயுதப்படை போலீஸாா் பாதுகாப்பும் என மூன்று அடுக்காக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தவிர, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையங்களில் வேலூா் தொகுதிக்கு 58 சிசிடிவி கேமராக்கள், அணைக்கட்டு தொகுதிக்கு 48 சிசிடிவி கேமராக்கள், குடியாத்தம், கே.வி குப்பம் தொகுதிகளுக்கு தலா 40 சிசிடிவி கேமராக்கள், காட்பாடி தொகுதிக்கு 44 சிசிடிவி கேமராக்கள் என 5 தொகுதிகளுக்கும் சோ்த்து 230 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com