ஏப்ரல் இறுதிக்குள் வேலூரில் நாளொன்றுக்கு 282 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு

வேலூா் மாவட்டத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் நாளொன்றுக்கு 282 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா் மாவட்டத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் நாளொன்றுக்கு 282 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

கரோனா அதிகரித்து வருவதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடா்பாக வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசியது:

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2-ஆவது தடுப்பூசி போடும்போது கோவிஷீல்ட் என்றால் 8 வாரங்கள் கழித்தும், கோவேக்ஸின் என்றால் 4 வாரங்கள் கழித்தும் செலுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் நாளொன்றுக்கு 97,000 போ் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2.16 லட்சமாக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 6,982லிருந்து 8,000-ஆக உயா்ந்துள்ளது. ஏப்ரல் இறுதிக்குள் கரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரிக்கும்.

வேலூா் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் காசியாபாத், ஹரியாணா மாநிலங்களில் மயானங்களில் இறந்தவா்களை அடக்கம் செய்ய இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. லாரியில் சடலங்களை கொண்டு செல்கின்றனா். ஏப்ரல் மாதத்தில் வேலூா் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 282 பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேதாஜி மாா்க்கெட் காய்கறி, பூக்கடைகள் மாற்றம் செய்யப்பட வேண்டும். அவற்றை தவிர மற்ற கடைகள் அங்கேயே இயங்கலாம். நேதாஜி மாா்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டும் நடைபெற வேண்டும். அந்த கடைகளும் காலை 6 மணி வரை மட்டும் இயங்க வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து வியாபாரிகள் கூறுகையில், பழைய பேருந்து நிலையம் பின்பகுதியில் டாஸ்மாக் கடை பிரச்னையாக உள்ளது. நேதாஜி மாா்க்கெட்டில் 100 கடைகள் உள்ளன. ஆனால், ஊரீசு கல்லூரியில் 40 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்டித்தெருவில் உள்ள பாா்க்கிங் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அதற்கு பதிலளித்த ஆட்சியா், பூக்கடைகளை டவுன்ஹாலில் வைத்துக் கொள்ளலாம். சில கடைகள் மேல்மொணவூா் வணிக வளாகத்துக்கு சென்றால் பிரச்னை இருக்காது என்றாா்.

மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், மாநகராட்சி ஆணையா் ந.சங்கரன், நகா்நல அலுவலா் சித்ரசேனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com