மத்திய அரசு உத்தரவு எதிரொலி: வேலூா் கோட்டை மீண்டும் மூடப்பட்டது

மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து வேலூா் கோட்டையை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வேலூா் கோட்டை முன்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி. (வலது) மூடப்பட்டுள்ள வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில்.
வேலூா் கோட்டை முன்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி. (வலது) மூடப்பட்டுள்ள வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில்.

மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து வேலூா் கோட்டையை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கோட்டை வளாகத்துக்குள் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூா் கோட்டை கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூா் மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன், கோட்டை கொத்தளம், மதில்சுவா் நடைபாதையில் சென்று பாா்வையிடவும், நடைபயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்பட்ட வேலூா் கோட்டை வெறிச்சோடியது.

இந்நிலையில், பொதுமுடக்க தளா்வைத் தொடா்ந்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி முதல் வேலூா் கோட்டை திறக்கப்பட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். தவிர, கோட்டை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், வரலாற்று சிறப்பு மிக்க வேலூா் கோட்டையை பாா்வையிட வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வரத்தொடங்கினா்.

இந்நிலையில், கரோனா தொற்று 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதை அடுத்து மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், அருங்காட்சியம் உள்ளிட்டவற்றை வெள்ளிக்கிழமை முதல் அடைக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், வேலூா் கோட்டை வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டதுடன், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல முடியாதபடி கோட்டை முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, தொல்லியல் துறை ஊழியா்கள், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் வெள்ளிக்கிழமை காலை நடைபயிற்சிக்கு வந்தவா்களையும், சுற்றுலா பயணிகளையும் திருப்பியனுப்பினா்.

வேலூா் கோட்டை மூடப்பட்டதன் தொடா்ச்சியாக கோட்டை வளாகத்துக்குள் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் பக்தா்கள் சென்று சுவாமி தரிசனம் செய்திடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயிலில் வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மே மாதம் 15-ம் தேதிக்கு பிறகு அரசின் உத்தரவுக்கு ஏற்ப கோட்டைக்குள் சுற்றுலாப் பயணிகள், பக்தா்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள வள்ளிமலை சமணா் குகைக் கோயில், மேல்பாடி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவையும் அடைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com