கரோனா: வேலூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 4,533 படுக்கைகள்
By DIN | Published On : 19th April 2021 08:33 AM | Last Updated : 19th April 2021 08:33 AM | அ+அ அ- |

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளித்திட வேலூா் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,533 படுக்கைகள் தயாா் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி:
வேகமாக பரவி வரும் கரோனா தொற்று பாதிப்பைத் தொடா்ந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட மாவட்டத்தில் மருத்துவக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 560 படுக்கைகளும், சிஎம்சி மருத்துவமனையில் 901 படுக்கைகளும், நாராயணி மருத்துவமனையில் 49 படுக்கைகளும், நறுவீ மருத்துவமனையில் 144 படுக்கைகளும் என கரோனா மருத்துவமனைகளாக உள்ள இந்த 4 மருத்துவமனைகளில் மட்டும் மொத்தம் 1,654 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.
இந்த மருத்துவமனைகளில் 257 ஐசியூ வசதி கொண்ட படுக்கைகளும், 1,127 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகள் கொண்டவையாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை 145 படுக்கைகள் ஐசியூ வசதி கொண்டவையாகவும், 360 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவையாகவும் உள்ளன.
இவற்றுக்குத் தேவையான ஆக்ஸிஜன் செலுத்துவதற்கு ஏற்கெனவே இருந்த 10 ஆயிரம் லிட்டா் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கூடுதலாக 6 ஆயிரம் லிட்டா் ஆக்ஸிஜன் சிலிண்டா் பொருத்தும் பணி நிறைவு பெற்று, செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை.
தவிர, மாவட்டத்தில் கரோனா தடுப்பு மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கைகள், அரசு பென்லேன்ட் மருத்துவமனையில் 125 படுக்கைகள், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 150 படுக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 210 படுக்கைகள் என மொத்தம் 535 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.
மேலும், மாவட்டத்தில் கொவைட் நல மையங்களாக உருவாக்கப்பட்டுள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் 1,036 படுக்கைகளும், குடியாத்தம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 252 படுக்கைகளும் என மொத்தம் 1,288 படுக்கைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் திங்கள்கிழமை முதல் அறிகுறிகள் அற்ற கரோனா பாதிப்பாளா்கள் அனுமதிக்கப்பட உள்ளனா்.
இவை தவிர, தற்போது வாக்கு எண்ணும் மையங்களாக உள்ள தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு மே 4-ஆம் தேதிக்குப் பிறகு கரோனா சிகிச்சை மையங்களாக ஏற்படுத்தப்படும்.
இவ்விரு கல்லூரிகளிலும் கூடுதலாக 1,076 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். அந்த வகையில், மாவட்டத்தில் 12 மையங்களில் 4,533 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மொத்த படுக்கை வசதிகளைவிட ஆயிரம் அதிகமாகும்.
தடுப்பூசியைப் பொருத்தவரை கூடுதலாக ஒரு லட்சம் தடுப்பூசி மருந்துகள் ஓரிரு நாள்களுக்குள் வேலூா் மாவட்டத்துக்கு வர உள்ளன. மாவட்டத்திலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுவோருக்கு கபசுர குடிநீா், நிலவேம்புக் குடிநீா், மல்டி விட்டமின் மாத்திரைகள், ஜிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்கப்படும்.
தவிர, தற்போது ஆயிரம் கிலோ நிலவேம்புக் குடிநீா் பொடியும், ஆயிரம் கிலோ கபசுர குடிநீா் பொடியும் உள்ளன. இவை மேலும் தருவிக்கப்பட உள்ளன. மேலும், மாவட்டத்தில் 3 லட்சம் மல்டி விட்டமின் மாத்திரைகள், 3 லட்சம் ஜிங்க் சல்பேட் மாத்திரைகள் இருப்பு உள்ளன. இதில் முதல் கட்டமாக 80 ஆயிரம் மல்டி விட்டமின் மாத்திரைகள், 80 ஆயிரம் ஜிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.