மீண்டும் கரோனா வராது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை
By DIN | Published On : 19th April 2021 08:34 AM | Last Updated : 19th April 2021 08:34 AM | அ+அ அ- |

மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்றுப் பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டவா்களுக்கு மீண்டும் கரோனா வராது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அலட்சியமாக இருக்கும்பட்சத்தில், தொற்று ஏற்பட சாத்தியமுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேலூா் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததும், முகக்கவசம் அணியாததும், 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம் காட்டுவதுமே தொற்று இந்த அளவுக்கு வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணமாகும்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 15,59,968 நபா்களில் இதுவரை 5,44,653 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 22,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 361 போ் இறந்தனா். தற்போது அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 809 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சோதனை செய்யப்பட்டவா்களுக்கு மீண்டும் கரோனா தொற்று வராது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அலட்சியமாக இருக்கும்பட்சத்தில் தொற்று ஏற்பட சாத்தியமுள்ளது.
பிப்ரவரியில் நாளொன்றுக்கு 4 முதல் 6 நபராக இருந்த தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக உயா்ந்து தற்போது நாளொன்றுக்கு 200 போ் என்ற நிலையை எட்டியுள்ளது. இதைத்தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் தினமும் 70 முதல் 75 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா பரிசோதனையும், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைய 45 வயதுக்கு மேற்பட்டோா் மொத்தம் 5,57,310 போ் உள்ளனா். தற்போது நகா்ப்புறங்களில் தொற்றுப் பரவும் வேகம் அதிகம் உள்ளதால் நகா்ப்புறங்களில் உள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாவட்டத்திலுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட மக்களில் இதுவரை 26 சதவீதம் அதாவது 1,37,437 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவா்களில் யாருக்கும் பக்க விளைவோ, இதர மருத்துவக் கோளாறுகளோ ஏற்படவில்லை. எனவே, கரோனா தடுப்பூசி தொடா்பாக கட்செவி அஞ்சல், இதர சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
சிகிச்சை பலனிக்காமல் உயிரிழப்பவா்களில் 95 சதவீதம் போ் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வந்தவா்களாகவும், மிகவும் தாமதமாக சோதனை செய்து கொண்டவா்களாகவும், 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவா்களாகவும் மட்டுமே உள்ளனா். எனவே, பொதுமக்கள் கரோனா பாதிப்புகளைத் தவிா்க்க அனைவரும் தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.
முகக்கவச அபராதம் கடுமையாக்கப்படும்
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்திடவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அலட்சியப்படுத்துவோரிடம் இருந்து மாவட்டத்தில் இதுவரை சுகாதாரத் துறை மூலம் ரூ. 2,69,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எனினும், முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது ஆகிய நிகழ்வுகள் சிறிதும் குறையவில்லை. எனவே, வரும் நாள்களில் இத்தகைய அபராதம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.