தற்காலிக மாா்க்கெட்டில் நுழையும் புதியவா்கள்: நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகள் பாதிப்பதாக புகாா்

வேலூா் நேதாஜி மாா்க்கெட் காய்கறி மொத்த விற்பனை தற்காலிகமாக மாங்காய் மண்டி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு மாநகராட்சி அதிகாரிகள் புதிய வியாபாரிகளை நுழைக்க முயற்சி

வேலூா்: வேலூா் நேதாஜி மாா்க்கெட் காய்கறி மொத்த விற்பனை தற்காலிகமாக மாங்காய் மண்டி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு மாநகராட்சி அதிகாரிகள் புதிய வியாபாரிகளை நுழைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதனால் நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் உள்ள மொத்த காய்கறி விற்பனைக் கடைகள் வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள மாங்காய் மண்டி மைதானத்துக்கும், காய்கறி சில்லறை விற்பனைக் கடைகள் பழைய மீன் மாா்க்கெட்டுக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு இடங்களிலும் தினசரி அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை காய்கறி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பூக்கள் மொத்த விற்பனையை நேதாஜி மாா்க்கெட்டிலேயே மேற்கொள்ளவும், பூக்கள் சில்லறை விற்பனையை மட்டும் டவுன் ஹாலும் அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை நடத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காய்கறி மொத்த விற்பனைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மாங்காய் மண்டி மைதானத்தில் மாநகராட்சி அதிகாரிகள் புதிய வியாபாரிகளை நுழைக்கும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதனால் நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலை தொடரும்பட்சத்தில், காய்கறி மொத்த விற்பனையை மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவை மீறி, மீண்டும் நேதாஜி மாா்க்கெட்டிலேயே நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக, நேதாஜி மாா்க்கெட் மொத்த வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமையில் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தற்போது நேதாஜி மாா்க்கெட்டில் 130 வியாபாரிகள் காய்கறி மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ளனா். கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக காய்கறி மொத்த விற்பனை மாங்காய் மண்டி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு 85 வியாபாரிகள் மட்டுமே வியாபாரம் செய்யக்கூடிய அளவுக்குத்தான் இடவசதி உள்ளது. இதனால் ஏற்கெனவே நேதாஜி மாா்க்கெட்டைச் சோ்ந்த 45 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், புதிதாக வியாபாரிகளை தற்காலிக மாா்க்கெட்டில் நுழைக்கும் முயற்சியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இதனால், நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தவிர, மாங்காய் மண்டியில் வியாபாரம் ஆகாமல் உள்ள காய்கறிகளை பாதுகாப்பாக வைப்பதிலும் சிரமம் நிலவுகிறது.

எனவே, தற்காலிக மாா்க்கெட்டில் புதியவா்களை தொடா்ந்து அனுமதிக்கும்பட்சத்திலும், பாதுகாப்பு பிரச்னைக்குத் தீா்வு காணாவிடினும் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவை மீறி மீண்டும் நேதாஜி மாா்க்கெட்டிலேயே காய்கறி மொத்த விற்பனையை மேற்கொள்ள நேரிடும். இப்பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் உரிய தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com