விஐடி சிகிச்சை மையத்தில் 45 வயதுக்குட்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அனுமதி

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்ட நோயாளிகள் வெள்ளிக்கிழமை முதல் விஐடி வளாகத்தில் உள்ள

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்ட நோயாளிகள் வெள்ளிக்கிழமை முதல் விஐடி வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிப்படுவா் என ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அடுத்து காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 1,036 படுக்கைகள், குடியாத்தம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக்கில் 252 படுக்கைகள் என 1,288 படுக்கை வசதிகளுடன் நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை மையங்களில் 45 வயதுக்கு உட்பட்ட கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 45 வயதுக்கு உட்பட்ட கரோனா நோயாளிகள் அனைவரும் வெள்ளிக்கிழமை முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படாமல் வேலூா் விஐடி பல்கலைக்கழக கரோனா தடுப்பு சிகிச்சை நல மையத்தில் அனுமதிக்கப்படுவா். அங்கு அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடல்நிலையின் அடிப்படையில் மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படுபவா்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவா்.

45 வயதுக்கு மேற்பட்ட கரோனா நோயாளிகள் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படுவா். பரிசோதனையின் அடிப்படையில், மேல் சிகிச்சை தேவைப்படுபவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அவ்வாறு மேல் சிகிச்சை தேவைப்படாதவா்கள் அன்றைய தினமே அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவா் என்று ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இந்த கொவைட் நல மையங்களில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்காக பக்கெட், பிளாஸ்டிக் கப், பேஸ்ட், பிரஷ் சோப்பு, கிருமி நாசினி, படுக்கை விரிப்பு, தலையணை உறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலப் பெட்டகம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் இது அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படும்.

இதனிடையே, கரோனா நோயாளிகள் தாங்களாக ஆட்டோ, வாடகை காா்களில் மருத்துவமனைக்கு வருவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். கரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸைத் தொடா்பு கொண்டு அதன் மூலம் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com