அனுமதி அட்டைகளாக மாறிய அழைப்பிதழ்கள்

தமிழகத்தில் தளா்வற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சுப முகூா்த்த நாள் என்பதால், சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல
போலீஸாரிடம்  அழைப்பிதழைக்  காண்பித்து  அனுமதி கோரிய இரு சக்கர  வாகன ஓட்டி.
போலீஸாரிடம்  அழைப்பிதழைக்  காண்பித்து  அனுமதி கோரிய இரு சக்கர  வாகன ஓட்டி.

தமிழகத்தில் தளா்வற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சுப முகூா்த்த நாள் என்பதால், சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல பொதுமக்கள் அழைப்பிதழ்களை அனுமதி அட்டைகள் போல் எடுத்து வந்து போலீஸாரிடம் காண்பித்துச் சென்றனா்.

சித்திரை மாதம் பிறந்துள்ளதால், ஏற்கெனவே முடிவு செய்தபடி, திருமணம், நிச்சயதாா்த்தம், வீடு கிரகப் பிரவேசம், குழந்தைகளுக்கு காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

இந்நிகழ்ச்சிகளுக்காக, உறவினா்கள், நண்பா்களுக்கு அழைப்பிதழ்களை கொடுத்திருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதனால், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல இருந்தவா்கள் பெரும் அவதிக்கு ஆளாயினா். காா், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் இயங்க அனுமதியில்லாததால், பெரும்பாலோனா், இரு சக்கர வாகனங்களில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்குச் சென்றனா்.

அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா். அப்போது பொதுமக்கள் அழைப்பிதழ்களை அடையாள அட்டைகள் போல் போலீஸாரிடம் காண்பித்து, தீவிர விசாரணைக்குப் பிறகு நிகழ்ச்சிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தியவா்கள், நான்கு சக்கர வாகனங்கள் இல்லாததால், திருமண மண்டபங்களில் இருந்து பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாயினா். இதற்கிடையில் தேவையில்லாமல், இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த இளைஞா்களை, போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். ஞாயிற்றுக்கிழமை குடியாத்தம் நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

குடியாத்தம் டிஎஸ்பி பி.ஸ்ரீதரன், நகர காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன், கிராமிய காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு ஆகியோா் தலைமையில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com