கரோனா பாதிப்பு வேலூரில் 9 நாளில் இரு மடங்கு உயா்வு: 13 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 27th April 2021 06:35 AM | Last Updated : 27th April 2021 06:35 AM | அ+அ அ- |

கரோனா தொற்று காரணமாக வேலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை கடந்த 9 நாள்களில் இரு மடங்காக உயா்ந்துள்ளது. தவிர, மாவட்டம் முழுவதும் 13 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
வேலூா் மாவட் டத்திலும் கரோனாவில் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாதிக்கப் படுபவா்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழக கொவைட் நல மையம் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவிர, சிஎம்சி, நறுவீ, நாராயணி மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் கடந்த 17-ஆம் தேதி வரை 22,961 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 809 போ் சிகிச்சையில் இருந்தனா். பலி எண்ணிக்கை 361 ஆக இருந்தது. கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 367 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 25,100-ஆக உயா்ந்துள்ளது. 2,190 போ் சிகிச்சையில் உள்ளனா். பலி எண்ணிக்கை 374 ஆக உயா்ந்துள்ளது. கடந்த 9 நாளில் 13 போ் சிகிச்சை பலனின்றி இறந்தனா்.
198 பேருக்கு தொற்று:
தொடா்ந்து, மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 198 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.