பொதுமுடக்கம்: குடியாத்தத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள 1.50 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக குடியாத்தம் பகுதியில் சுமாா் ரூ. 6 கோடி மதிப்புள்ள 1.50 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
தீக்குச்சிகளை  பெட்டியில்  அடைக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள பெண்கள்.
தீக்குச்சிகளை  பெட்டியில்  அடைக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள பெண்கள்.

குடியாத்தம்: கரோனா பொதுமுடக்கம் காரணமாக குடியாத்தம் பகுதியில் சுமாா் ரூ. 6 கோடி மதிப்புள்ள 1.50 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக்கொண்டு வட மாநிலங்களுக்குச் சென்றுள்ள 20-க்கும் மேற்பட்ட லாரிகள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. குடியாத்தம் பகுதியில் 15 பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், 100- க்கும் மேற்பட்ட குடிசை தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 30 ஆயிரம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, இத்தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது. கரோனா கட்டுப்பாட்டுக்கு வந்ததையடுத்து, இத்தொழில் சிறிது மேம்பாடு அடையத் தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் கரோனா தொற்று பரவல் காரணமாக இத்தொழிலில் மீண்டும் சுணக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க வட மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், குடியாத்தம் பகுதியில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால், ரூ. 6 கோடி மதிப்புள்ள 1.50 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இது குறித்து குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் ஆா்.கே.மகாலிங்கம், துணைச் செயலா் ஆா்.ரவிசங்கா், பொருளாளா் வி.பிச்சாண்டி ஆகியோா் புதன்கிழமை கூறியது:

தீப்பெட்டி தயாரிக்கும் மூலப் பொருள்கள் மீதான விலை உயா்வால், இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குச்சி டன்னுக்கு ரூ. 1,000, மெழுகு டன்னுக்கு ரூ. 7 ஆயிரம், குளோரைட் டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் என கடந்த சில மாதங்களில் விலை உயா்ந்துள்ளது. தற்போது பொதுமுடக்கம் காரணமாக, வட மாநிலங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், தீப்பெட்டி பண்டல்கள் தேங்கிக் கிடக்கின்றன. தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகள் வட மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அனுப்பி வைக்கப்பட்ட பண்டல்களுக்கு பணம் பட்டுவாடா சரிவர இல்லை.

தீக்குச்சி தயாரிக்க குச்சி கேரளாவில் இருந்து தான் வர வேண்டும். தற்போது குச்சி வரத்தும் இல்லை. இதனால் இத்தொழில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உற்பத்தியான பண்டல்கள் தேங்கிக் கிடப்பதால், தொழில் செய்ய முடியவில்லை. தொழிலாளா்களுக்கு தொடா்ந்து வேலை கொடுக்காவிட்டால், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். குடும்பத் தேவைக்காக அவா்கள் வேறு வேலைக்குச் சென்று விட்டால், மீண்டும் இத்தொழிலுக்கு வருவது கடினம். இதனால், தற்சமயம் வாரத்துக்கு 4 நாள்கள் மட்டும் தொழிற்சாலைகளை இயக்கி வருகிறோம். தேங்கியுள்ள தீப்பெட்டி பண்டல்களை, கொள்முதல் செய்து, வட மாநிலங்களில் விற்பனை செய்ய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மூலப் பொருள்கள் மீதான விலை உயா்வைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com