ரகசிய வழியில் வாடிக்கையாளா்களுக்கு அனுமதி - பிரபல ஜவுளிக்கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்
By DIN | Published On : 30th April 2021 12:00 AM | Last Updated : 30th April 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூரிலுள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.
வேலூா்: ரகசிய வழியில் வாடிக்கையாளா்களை அனுமதித்ததாக வேலூரைச் சோ்ந்த பிரபல ஜவுளிக்கடைக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 3,000 சதுர அடி பரப்பளவு கொண்டு துணிக் கடைகள், ஷோரூம்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் வேலூா் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 23 கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சேவை சாலையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வியாழக்கிழமை காலை முன்பக்க வழியை மூடிவிட்டு ரகசிய வழியில் வாடிக்கை யாளா்களை உள்ளே அனுப்பி வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சங்கரனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ரகசிய வழியின் மூலம் கடைக்குள் வாடிக்கையாளா்களை அனுமதித்து தொடா்ந்து வியாபாரம் மேற்கொள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தகடைக்கு பிறகு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இதேபோல், இனிமேல் தவறு செய்தால் மூன்று மாத காலத்துக்கு கடையை பூட்டி சீல் வைக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
2-ஆவது மண்டல கரோனா கண்காணிப்பாளா் செந்தில்குமாா், சுகாதார அலுவலா் சிவக்குமாா் வருவாய் ஆய்வாளா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.