திருமுருக கிருபானந்த வாரியார் சிலைக்கு அரசு மரியாதை: ஆட்சியர், எம்எல்ஏ மாலை அணிவிப்பு

திருமுருக கிருபானந்த வாரியார் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் புதன்கிழமை அரசு மரியாதை செய்தனர்.
திருமுருக கிருபானந்த வாரியார் சிலைக்கு அரசு மரியாதை
திருமுருக கிருபானந்த வாரியார் சிலைக்கு அரசு மரியாதை

வேலூர்: ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தவரும், தீவிர முருக பக்தருமான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை நிறைவேற்றும் விதமாக காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே  காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிறந்தவர்  திருமுருக கிருபானந்தவாரியார். மல்லையதாச பாகவதர், மாதுஸ்ரீ கனகவல்லியம்மை தம்பதிக்கு பிறந்த பதினோரு பிள்ளைகளில் இவர் நான்காவது மகனாவார்.

தந்தையிடம் கல்வி, இசை, இலக்கியங்களை கற்று 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்ற கிருபானந்த வாரியார், 12 வயதுக்குள்ளாக பதினாராயிரம் பண்களை கற்று 18-ஆவது வயதிலேயே சிறப்பாக ஆன்மீக சொற்பொழிவாற்றும் ஆற்றல் கொண்டிருந்தார்.

தனது 19 வயதில்  அமிர்தலட்சுமியை திருமணம் புரிந்த கிருபானந்தவாரியார், 23 வயதில் சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் நான்கு ஆண்டுகள் வீணை பயிற்சியும் மேற்கொண்டார்.

தீவிர முருக பக்தரான இவர் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமயம், இலக்கியம், பேச்சு, எழுத்து, இசை என பன்முக புலமை பெற்றவர். இவர் தனியாக புராண பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.

இவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கையொட்டி அமைந்திருந்ததால் பாமர மக்களின் உள்ளங்களையும் கவர்ந்திருந்தார். இதன்மூலம், கிருபானந்த வாரியாரை "அருள்மொழி அரசு' என்றும், திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இவர் 37 ஆண்டுகள் நடத்தி வந்த திருப்புகழ் அமிர்தம் எனும் மாதப் பத்திரிக்கை மூலம் திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், பல கட்டுரைகளையும் எழுதி வந்தார். இவர் 150க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியதுடன், 500-க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆன்மீக சொற்பொழிவாற்ற லண்டன் சென்றிருந்த கிருபானந்த வாரியார் 1993  நவம்பர்  7-இல் தாயகம் திரும்பும் வழியில் விமானத்திலேயே சித்தி அடைந்தார்.

இவருக்கு காங்கேநல்லூரில் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே முழு உருவ சிலையுடன் தனிக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய பெருமை மிக்க கிருபானந்த வாரியாருக்கு மரியாதை  சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தது.

அதனடிப்படையில், காங்கேயநல்லூரிலுள்ள திருமுருக கிருபானந்த வாரியார் சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ப.கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அதிமுக மாநகர் மாவட்ட செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்பட முக்கிய பிரமுகர்களும் கிருபானந்த வாரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், கிருபானந்த வாரியார் குடும்பத்தினர், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com