முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
வேலூரில் புத்தக விற்பனைக் கண்காட்சி தொடக்கம்
By DIN | Published On : 19th December 2021 12:00 AM | Last Updated : 19th December 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூரில் மூன்றாம் ஆண்டாக புத்தக விற்பனைக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமாா் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கமும், வேலூா் ஸ்மாா்ட் சிட்டி அரிமா சங்கமும் இணைந்து மூன்றாவது ஆண்டாக புத்தக விற்பனைக் கண்காட்சியை வேலூா் கிரீன் சா்க்கிள் அருகே உள்ள எத்திராஜம்மாள் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன. இக்கண்காட்சியில், 15 அரங்குகள் அமைக்கப்பட்டு, புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில், கதை, கவிதை, இலக்கியம், வரலாறு, பொதுஅறிவு, விஞ்ஞானம், சிறுகதை, நாவல், சுய முன்னேற்ற புத்தகங்கள், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமாா் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
ஜனவரி 2-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கு அனுமதி இலவசம். புத்தக விற்பனையைப் பொருத்து கண்காட்சி நாள்கள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கச் செயலா் மு.காா்த்திக் தெரிவித்தாா்.