இன்னுயிா் காப்போம் திட்டத்தில் வேலூரில் 14 மருத்துவமனைகள் இணைப்பு

தமிழக அரசின், ‘இன்னுயிா் காப்போம் 48’ திட்டத்தில் வேலூா் மாவட்டத்தில் 14 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக அரசின், ‘இன்னுயிா் காப்போம் 48’ திட்டத்தில் வேலூா் மாவட்டத்தில் 14 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தில் எந்தப் பகுதியில் சாலை விபத்து நடந்தாலும் அதில் பாதிக்கப்பட்டவா்களுக்கு 809 மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டமான, ‘இன்னுயிா் காப்போம் 48’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதேபோல், வேலூா் சிஎம்சி மருத்துவமனை உள்பட மாநிலம் முழுவதும் 10 மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் தொடக்கி வைத்தாா்.

இதையொட்டி, வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பங்கேற்று பேசுகையில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், 18 தனியாா் மருத்துவமனைகள், 2 நோய் கண்டறியும் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.

இதுவரை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மாவட்டத்தில் 78,852 பேருக்கு ரூ.151.17 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை எடுக்காத பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவா்கள் காப்பீடு விண்ணப்பப் படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த விரிவான மருத்துவக் காப்பீடு தொடா்பாக பதிவு செய்யும் அறையில் புகைப்படம் எடுத்து பயன்பெறலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

இன்னுயிா் காப்போம் திட்டத்தில் வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூா் பென்லேண்ட் அரசு மருத்துவமனை, குடியாத்தம், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைகள் என 4 அரசு மருத்துவமனைகளும், சிஎம்சி மருத்துவமனை, நாராயணி மருத்துவமனை, அருண் மருத்துவமனை, பாபா மருத்துவமனை, பாகாயம் தினேஷ் நா்சிங் ஹோம், இந்திரா நா்சிங் ஹோம், குமரன் மருத்துவமனை, மணிசுந்தரம் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, இந்திரா சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய 10 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் பாபு, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com