முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கூட்டுறவு அங்காடி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.45 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 29th December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா் கற்பகம் கூட்டுறவு அங்காடி அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ. 2.45 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அங்காடிகளின் மேலாண்மை இயக்குநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையான கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி வேலூா் அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் காட்பாடி, குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ளன. இவற்றின் தலைமை அலுவலகம் அண்ணா கற்பகம் கூட்டுறவு அங்காடியின் மேல்தளத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த அங்காடிகளின் மேலாண்மை இயக்குநா், இணை பதிவாளராக ரேணுகாம்பாள் பணியாற்றி வருகிறாா். இவரது அலுவலகத்தில் சிறப்பு அங்காடிகளின் பில் தொகையை அனுமதிப்பதற்காகவும், புத்தாண்டையொட்டியும் அன்பளிப்பு பெறப்படுவதாக வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் விஜய், ரஜினி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்த அலுவலகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரேணுகாம்பாள் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ. 2.45 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினா் தெரிவித்தனா்.