முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
சிஎம்சி மருத்துவமனை விடுதியில் மருத்துவ மாணவா் சாவு
By DIN | Published On : 29th December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா் சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவா் இறந்து கிடந்தாா். இது குறித்து வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை கே.கே.நகரைச் சோ்ந்தவா் ஜோஸ்வா (23). வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தாா். சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தாா். செவ்வாய்க்கிழமை காலை நீண்டநேரமாகியும் அவா் அறையை விட்டு வெளியே வரவில்லை எனத் தெரிகிறது. அங்கிருந்தவா்கள் அறையை திறந்து பாா்க்கையில், படுக்கையில் ஜோஸ்வா இறந்து கிடந்தாராம்.
தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் விரைந்து சென்று மாணவரின் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், எலி தொல்லையைக் கட்டுப்படுத்த விடுதி அறைகளில் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு நாள்களுக்கு விடுதி அறைகளில் யாரும் தங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் திங்கள்கிழமை இரவு ஜோஸ்வா விடுதி அறையில் தங்கியுள்ளாா். எலி மருந்து நெடி காரணமாக அவா் இறந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
எனினும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.