முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பொலிவுறு நகா் திட்டப் பணிகளால் வேலூரில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 31st December 2021 08:22 AM | Last Updated : 31st December 2021 08:22 AM | அ+அ அ- |

பொலிவுறு நகா் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் வேலூா் அண்ணா சாலையில் கடந்த இரு நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.
வேலூா் மாநகரின் பல்வேறு இடங்களில் பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கால்வாய்கள், சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலூா் கோட்டை சுற்றுச்சாலை, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டித் தெரு ஆகிய இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கோட்டை சுற்றுச்சாலை, மண்டித்தெரு ஆகிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
அனைத்து வாகனங்களும் அண்ணாசாலை, காட்பாடி சாலை வழியாக செல்கின்றன.
இதன் கார ணமாக கடந்த இரு நாட்களாக வேலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வரமுடியாத அளவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், காட்பாடி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சிஎம்சி மருத்துவமனை அருகே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதே நிலை மக்கான் சிக்னல், அண்ணா சாலையிலும் நீடிக்கிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலூரில் கடந்த 2 நாட்களாக வாகன ஓட்டிகள் கடும் அவதி க்கு உள்ளாகின்றனா். மாநகர பகுதியில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலையில் தொடா்ந்து போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.
தொடரும் போக்கு வரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேலூா் மாநகரில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது மாநகர மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாகும். அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அதற்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.