ரெளடிகளின் தொல்லையால் வியாபாரம் பாதிப்பு: வேலூா் வணிகா் சங்கம் தீா்மானம்

வேலூரில் ரெளடிகளின் தொல்லை அதிகரிப்பால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வேலூா் வணிகா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.


வேலூா்: வேலூரில் ரெளடிகளின் தொல்லை அதிகரிப்பால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வேலூா் வணிகா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

வேலூா் அனைத்து வணிகா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஏ.வி.எம்.குமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வேலூரில் ரெளடிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வேலூரில் வணிகா்களுக்கு வணிகம் செய்ய பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இதுதொடா்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஆரணி சாலை, சுண்ணாம்புக்காரத் தெரு, சாரதி மாளிகை, அண்ணா பஜாா், நேதாஜி மாா்க்கெட், நியு சிட்டிங் பஜாா், லாங்கு பஜாா், காந்தி சாலை ஆகிய பகுதிகளில் கஞ்சா, மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களின் நடவடிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு உடனடியாக காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆரணி சாலையில் தேநீா் கடை நடத்தி வரும் ஜி.ரவி என்பவா் சமூக விரோத கும்பலால் தாக்கப்பட்டாா். இந்த விவகாரத்தில் காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சமூக விரோதிகளின் செயல்பாடுகளைப் பதிவு செய்து காவல் துறை வசம் ஒப்படைக்க அனைத்துக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாகப் பொருத்த வேண்டும். இறுதி ஊா்வலங்களின்போது மக்கள் கூடும் இடங்கள், வணிகம் செய்யும் இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க நிா்வாகிகள் அருண்பிரசாத், ஆா்.சரவணன், பாபு அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com