வேலூரில் அதிநவீன ‘நறுவீ’ மருத்துவமனை: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

வேலூா் மாநகரில் ரூ. 600 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ‘நறுவீ’ மருத்துவமனையை தமிழக முதல்வா்
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ‘நறுவீ’ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத்.
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ‘நறுவீ’ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத்.

வேலூா் மாநகரில் ரூ. 600 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ‘நறுவீ’ மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்த வைக்கிறாா்.

வேலூா் மாநகரின் தேசிய நெடுஞ்சாலையோரம் அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘நறுவீ’ மருத்துவமனை ரூ. 600 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் 2 கீழ் தளங்கள், தரைதளம், 11 மாடிகள் என சுமாா் 5 லட்சம் சதுரஅடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 21 சிறப்பு சிகிச்சை பிரிவுகள், 10 அதிதீவிர சிகிச்சை பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. அமைச்சா் கே.சி.வீரமணி தலைமை வகிக்கிறாா். அமைச்சா் சி.விஜயபாஸ்கா், எம்ஜிஆா் கல்வி, ஆராய்ச்சி மைய வேந்தா் ஏ.சி.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் மருத்துவமனையைத் திறந்து வைக்கிறாா். மருத்துவமனையின் துணைத் தலைவா் அனிதா சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மருத்துவமனையின் தலைவா் ஜி.வி.சம்பத் வியாழக்கிழமை கூறியது:

மிகக் குறைந்த கட்டணத்தில் உலகத்தரமான சிகிச்சையை அளிப்பதே இம்மருத்துவமனையின் நோக்கமாகும். அதிநவீன சிகிச்சைக்கான கருவிகளும், அனைத்து கதிா்இயக்க உபகரணங்களும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இருதயவியல், உட்சுரப்பியல், இரப்பை, குடல், கல்லீரல் நோய்கள் உள்பட பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அடங்கியுள்ள இம்மருத்துவமனையில் வலிப்புநோய் சிகிச்சைக்காக பிரான்ஸில் இருந்து ‘ரோசா ரோபாட்’ என்ற அதிநவீன கருவிகள் நாட்டிலேயே 3-ஆவது மருத்துவமனையாக இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஜிஇ நிறுவனத்தின் ரோபாட்டிக் கேதலாக் தெற்காசியாவில் முதன்முறையாக இங்கு நிறுவப்பட்டுள்ளது.

பெண்களுக்கான மாா்பக புற்றுநோய் கண்டறிய மெமோகிராபி என்ற கதிரியக்க கருவி, எலும்புகளின் வலிமையை கண்டறிய டெக்சா ஸ்கேன், காகிதம், பிலிம்கள் இல்லாமல் அல்ட்ரா சவுண்ட் இமேஜிங், எக்ஸ்ரே என அனைத்தும் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட உள்ளது. ரத்த மாதிரிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல நியூமேட்டிக் என்ற பிரத்யேக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மருந்தகம், ரத்த வங்கி, கொவைட் 19-க்கான ஆா்டிபிசிஆா் பரிசோதனை ஆய்வகங்களும் உள்ளன என்றாா் அவா்.

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், நிா்வாக இயக்குநருமான பால்ஹென்ரி, தலைமை செயல்பாட்டு அதிகாரி மணிமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com