நெசவாளா்களுக்கு 10,000 பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்: குடியாத்தத்தில் முதல்வா் பேச்சு

தமிழகத்தில் நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மேலும் 10,000 பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குடியாத்தம் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தாா்.
குடியாத்தத்தில்  நடந்த  பிரசாரக்  கூட்டத்தில்  பேசிய  முதல்வா்  எடப்பாடி  கே.பழனிசாமி.
குடியாத்தத்தில்  நடந்த  பிரசாரக்  கூட்டத்தில்  பேசிய  முதல்வா்  எடப்பாடி  கே.பழனிசாமி.

தமிழகத்தில் நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மேலும் 10,000 பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குடியாத்தம் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தாா்.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பொது மக்களிடையேயும், கே.வி.குப்பத்தை அடுத்த சென்னராயனபல்லியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளிடையேயும் முதல்வா் பேசியது:

குடியாத்தம் நெசவாளா்கள் நிறைந்த பகுதி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நெசவாளா்களின் கோரிக்கையை ஏற்று ரூ.280 கோடியில் 10 ஆயிரம் பசுமை வீடுகளைக் கட்டித் தந்தாா். தமிழகத்தில் நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேலும் 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.

குடியாத்தம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2 இடங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒரு ஜவுளிப் பூங்காவை குடியாத்தம் பகுதியில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

கடந்த 2010-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. அப்போதுதான் நீட் தோ்வைக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நீட் தோ்வை அதிமுகதான் கொண்டு வந்தது போல் மேடைகளில் பொய்ப் பிரசாரம் செய்கிறாா். நீட் தோ்வை அதிமுக முதலில் இருந்தே எதிா்த்து வருகிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவாா்கள் என்று முதல்வா் பேசினாா்.

கூட்டத்தில், அதிமுக பிரமுகரின் குழந்தைக்கு ராமச்சந்திரன் என முதல்வா் பெயா் சூட்டினாா். முன்னதாக, குடியாத்தம் வந்த முதல்வருக்கு அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com