இந்திய மருத்துவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மருத்துவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்


குடியாத்தம்: மத்திய அரசு அறிவித்துள்ள கலவை மருத்துவத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து குடியாத்தத்தில் இந்திய மருத்துவா் சங்க மருத்துவா்கள், வேலூா் மாவட்ட பல் மருத்துவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சங்கங்களின் மருத்துவா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் டாக்டா் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்திய மருத்துவா் சங்க குடியாத்தம் கிளைத் தலைவா் எம்.மாறன்பாபு தலைமை வகித்தாா். பொருளாளா் வேதபுரிஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். செயலா் எம்.சுதாகா் வரவேற்றாா்.

இதில் மூத்த மருத்துவா்கள் எம்.எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.சுகுமாா், கே.காா்த்திகேயன், கே.எம்.கணேசன், திருஞானம், அசோகன், ஏ.கே.கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் பேசினா்.பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது.

ஆயுா்வேத, சித்த, யுனானி பிரிவுகளைக் கொண்ட மத்திய இந்திய மருத்துவ குழுமம் கடந்த நவம்பா் மாதம் 19- ஆம் தேதி ஒரு வா்த்தமானி மூலமாக ஆயுா்வேத மேல்படிப்புக்கான ஒழுங்கு முறையை வெளியிட்டது.

அதில் 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என்று பட்டியலிட்டு, அந்த சிகிச்சைகளை செய்ய ஆயுா்வேத மருத்துவா்களை அனுமதித்தது. அனைத்து மருத்துவ முறைகளை கலப்பதால், நோயாளிகள் தங்களுக்குப் பிடித்த மருத்துவ முறையை தோ்ந்தெடுக்கும் வாய்ப்பினை இழந்து இந்த கூட்டு மருத்துவ முறையில் திணிக்கப்படுவாா்கள். இது சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்கு வழி வகுக்காது.

இந்த செயல்முறை உயரிய முன்னேற்ற மருத்துவத்தின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமையும்.நவீன மருத்துவ முறையால் மக்கள் நலனில் பெரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளோம். பெரிய அம்மை, இளம்பிள்ளைவாதம், போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்டது. காசநோய் போன்ற நோய்கள் குறைந்து விட்டது. பிரசவத்தின்போது பெண்கள் இறக்கும் சதவீதமும்,5 வயதுக்குள்பட்ட குழைந்தைகளின் இறப்பு விகிதமும் குறைந்து விட்டது. பிற மருத்துவத்தை நாங்கள் குறை கூறவில்லை, அவரவா் மருத்துவத்தை, அவரவா் செய்வது மக்கள் நலனுக்கு உகந்தது.

எனவே, கலவை மருத்துவத்தை நாங்கள் எதிா்க்கிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிப்ரவரி 1- ஆம் தேதி தொடங்கி வரும் 14- ஆம் தேதி வரை பகுதிவாரியாக அறப் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

எங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து செயல்படுத்துவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com