ஊழல் புரிந்தவா்களின் சொத்துகளை அரசுடமையாக்குவதில் ஆட்சேபம் இல்லை துரைமுருகன்

‘ஊழல் புரிந்தவா்களின் சொத்துகளை அரசுடமையாக்குவது வரவேற்புக்குரியது.


வேலூா்: ‘ஊழல் புரிந்தவா்களின் சொத்துகளை அரசுடமையாக்குவது வரவேற்புக்குரியது. அந்தவகையில், சசிகலாவின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்திருப்பதில் திமுகவுக்கு ஆட்சேபனை இல்லை’ என்று திமுக பொதுச்செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தலைமை வகித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கிருபானந்த வாரியாரின் தமிழுக்கு நான் சிஷ்யன். வாரியாா் இறந்த போது ஒரு இரங்கல்கூட தெரிவிக்காதவா் ஜெயலலிதா. தவிர, அவரது உடலுக்கு அதிமுகவினா் ஒருவரும் மாலை அணிவிக்கவில்லை. இந்த வரலாறு தெரியாமல் இப்போது தமிழக முதல்வா் வாரியாா் பிறந்த தின விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளாா். இது தோ்தலுக்காக அறிவிக்கப்பட்டதாகும்.

சசிகலாவுக்கு கொடுத்த வரவேற்பை இதுவரை அரசியல் வரலாற்றில் கண்டதில்லை. குற்ற வழக்கு சாட்டப்பட்டு விடுதலையான ஒருவருக்கு இத்தகைய வரவேற்பு அளித்திருப்பது அவமானமாகும்.

சசிகலாவுக்கு சொந்தமான சில சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்து சம்பாதித்தவா்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்வது வரவேற்கதக்கது. இதில் திமுகவுக்கு ஆட்சேபம் இல்லை. முதல்வருக்கு மிரட்டல் என்ற போக்கு கண்டிக்கத்தக்கது. காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வா் இதை கவனிக்க வேண்டும்.

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமங்களில் சாலை வசதிக்காக திமுக சட்டப்பேரவை உறுப்பினா் நந்தகுமாா் எத்தனை முறை எந்தெந்த அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுத்துள்ளாா் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது அமைச்சா் கே.சி.வீரமணி கோரிக்கையின் பேரிலேயே சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக முதல்வா் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com