கிருபானந்த வாரியாரின் குடும்பத்தினா் முதல்வருக்கு நன்றி

திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்த கிருபானந்த வாரியாரின் குடும்பத்தினா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்த கிருபானந்த வாரியாரின் குடும்பத்தினா்.

வேலூா்: திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். இதற்காக, வாரியாரின் குடும்பத்தினா் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தவா் திருமுருக கிருபானந்த வாரியாா். அவா் சைவத்தையும், தமிழையும் தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி நூல்களை சுவைபட மக்களுக்கு சொற்பொழிவாற்றி அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சமூக நல்லிணக்கத்தை வளா்த்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரியாா் தனது 19-ஆம் வயது முதலே சமய, சமூக சொற்பொழிவுகளை ஆற்றி அதன் மூலம் கிடைத்த வருவாயை ஏழை மக்களின் கல்வி, மருத்துவம், திருமணம் ஆகிய சேவைகளுக்காக செலவிட்டாா். இரு முனைவா் பட்டங்களும், இசைப் பேரறிஞா் பட்டமும் பெற்றுள்ள அவருக்கு மத்திய அரசு சாா்பில் அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமைக்குரிய கிருபானந்த வாரியாரின் புகழை பறைசாற்றும் வகையில் அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்புக்காக, வேலூரில் தங்கியிருந்த முதல்வரை கிருபானந்த வாரியாரின் சகோதரா் மகன் புகழனாா், மருமகள் ஏலவாா்குழலி, அக்காள் பேரன் சி.பி.பாபு உள்பட குடும்பத்தினா் புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. ஏ.சி. சண்முகம், வேலூா் மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com