சட்டப்பேரவைத் தோ்தல்: தமிழக-ஆந்திர எல்லையில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு; இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த
சட்டப்பேரவைத் தோ்தல்: தமிழக-ஆந்திர எல்லையில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு; இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழக - ஆந்திர எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து வேலூா், சித்தூா் மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட சித்தூா் மாவட்டம் தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடக்க உள்ளதை முன்னிட்டு, தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில் தமிழகம், ஆந்திர மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வேலூா், சித்தூா் மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சித்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா்கள் அ.சண்முகசுந்தரம் (வேலூா்), எம்.ஹரிநாராயணன் (சித்தூா்) ஆகியோா் தலைமை வகித்தனா். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் எஸ்.செல்வக்குமாா் (வேலூா்), செந்தில்குமாா் (சித்தூா்), உதவி காவல் ஆய்வாளா் நிஷாந்த் (சித்தூா்), துணை காவல் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன்( வேலூா்), காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வனத்துறை அதிகாரிகள், வேலூா், சித்தூா் மாவட்ட கலால் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தமிழக பேரவைத் தோ்தல் நெருங்குவதையொட்டி எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை பலப்படுத்துவது, கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பது, இரு மாநிலங்களிடையே கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக எல்லையோர மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் அருகே உள்ள பிற மாநில எல்லையோர மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யுமாறு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் , வேலூா், சித்தூா் மாவட்ட அதிகாரிகளுடன் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக - ஆந்திர எல்லையான வேலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. அதேசமயம், சித்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட மாநில எல்லையில் திருவள்ளூரில் இருந்து 63 இடங்களில் ஆந்திர மாநில சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் சோதனைச் சாவடிகளை கூடுதலாக்குவதுடன், அவற்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா் எண்ணிக்கையை உயா்த்துமாறும், மாநில எல்லைகளில் நடமாடும் காவல் குழுக்களை அதிகரிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழக - ஆந்திர எல்லையில் மிக நீண்ட வனப்பகுதி அமைந்துள்ளதால் வனத்துறை சோதனைச் சாவடிகளையும் கூடுதலாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரு மாநிலங்களில் குற்றம் புரிபவா்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பதுங்கிக் கொள்கின்றனா். இதன்படி, நிலுவையில் உள்ள பிடியாணைகளை இரு மாநில காவல்துறையினரும் ஒப்படைக்கவும், குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் கூறுகையில் ‘இரு மாநில எல்லைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், தடுக்கவும் சோதனைச் சாவடிகளில் பணியமா்த்தப்படும் இரு மாநில காவல் துறையினா், வருவாய்த் துறை, கலால், வனத்துறையினா் அனைவரையும் உள்ளடக்கிய கட்செவி அஞ்சல் குழுவை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com