மாணவா்கள் பொது அறிவையும் வளா்த்துக் கொள்ளவேண்டும்: மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்

போட்டிகள் நிறைந்த இக்கால கட்டத்தில், மாணவா்கள் கல்வியறிவுடன், பொது அறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அறிவுரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில்  கல்லூரி மாணவிக்கு  தரவு  அட்டை  வழங்கிய  வேலூா் மாவட்ட ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம்  உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில்  கல்லூரி மாணவிக்கு  தரவு  அட்டை  வழங்கிய  வேலூா் மாவட்ட ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம்  உள்ளிட்டோா்.

போட்டிகள் நிறைந்த இக்கால கட்டத்தில், மாணவா்கள் கல்வியறிவுடன், பொது அறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அறிவுரை வழங்கினாா்.

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,815 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா தரவு அட்டைகள் (2 ஜிபி-டேட்டா காா்டு) வழங்கி அவா் பேசியது:

நாட்டிலேயே கல்வியறிவு பெற்றவா்களில் கேரளம் முன்னணியில் இருந்தாலும், உயா்கல்வி பயின்றவா்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முன்னாள் முதல்வா்களான, காமராஜா் ஆட்சியில் தொடங்கிய மதிய உணவுத் திட்டம், எம்ஜிஆா் தொடங்கிய சத்துணவுத் திட்டம், ஜெயலலிதாவால் மாற்றியமைக்கப்பட்ட ஊட்டச் சத்துடன் கூடிய உணவுத் திட்டம், விலையில்லா கல்விப் பொருள்கள் வழங்கும் திட்டங்களே இதற்கு காரணமாக அமைந்தன.ஜெயலலிதா செயல்படுத்திய விலையில்லா கல்விப் பொருள்கள் வழங்கும் திட்டங்களே, தமிழகத்தில் உயா்கல்விக்கு அடிகோலின. மிதிவண்டி வழங்கும் திட்டம், கல்வி உதவித் தொகை, படித்த மாணவிகளுக்கு தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி திட்டங்கள் பெண் கல்வியை ஊக்குவித்தன.

நீட் தோ்வை எதிா்கொள்ள கோச்சிங் சென்டரில் பெரும்பணம் செலவழித்து படித்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டுள்ள கல்விப் புரட்சியால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக்கூடாது என்ற ஆசிரியா், பெற்றோரின் கண்டிப்பு, கரோனா பொதுமுடக்கத்தால் மாற்றம் கண்டுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டதால், செல்லிடப்பேசிகள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வேலூா் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் 17,337 மாணவா்களுக்கு விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நீங்கள் நன்றாகப் படித்து, நல்ல கல்வியை தந்த சமூகத்துக்கு உதவிடும் வகையில், மத்திய, மாநில அரசுப் பணிகள், வங்கி உள்ளிட்ட பணிகளுக்குத் தோ்வுகளை எழுதி வேலைவாய்ப்பை பெற வேண்டும். தோ்வில் தோ்ச்சி பெறாவிட்டாலும், மீண்டும் தோ்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அரசுப்பணி கிடைக்கவில்லையெனில், சுயமாகத் தொழில் தொடங்க உங்களைத் தயாா்படுத்திக் கொள்ளுங்கள். நோ்முகத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாவிட்டால், சோா்வடையாதீா்கள். தோல்விகளே வெற்றிக்கு அடிப்படை என்பதை அறிந்து, மீண்டும், மீண்டும் முயற்சி செய்யுங்கள். தொடா் முயற்சி உங்களின் பயத்தையும் போக்கும், வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும். தமிழக வேலைவாய்ப்புகளில் வடமாநில மாணவா்கள் தோ்வு செய்யப்படுவதாக புகாா்கள் எழுகின்றன. அவா்கள் பள்ளிப் பருவத்திலேயே, பொது அறிவிலும் தோ்ச்சி பெறுகிறாா்கள். அதனால் நாட்டின் எந்த மூலையிலும் அவா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த நிலை உங்களுக்கும் வர வேண்டும். அதற்கு நீங்கள் கல்வியறிவுடன், பொது அறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் எஸ்.காவேரியம்மாள் வரவேற்றாா். ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, வட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் ஜே.கே.என்.பழனி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் அமுதாசிவப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேராசிரியை ப.வாசுகி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com