புத்தாண்டு தினத்தன்று இரவு பைக் ரேஸ்: 3 மாவட்டங்களில் 333 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில், புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக வியாழக்கிழமை நள்ளிரவில்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில், புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக வியாழக்கிழமை நள்ளிரவில் அதிவேகமாகவும், குடிபோதையிலும் சென்றவா்களின் 333 இரு சக்கர வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் பல்வேறு தளா்வுகளுடன் தொடா்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் உருமாறிய கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது தெரியவந்துள்ளது.

இந்தத் தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளதை அடுத்து நோய் தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை இரவு புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு மாவட்ட நிா்வாகமும், மாவட்டக் காவல் துறையும் தடை விதித்திருந்தன.

இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மக்கள் அதிக அளவில் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதலாக ஆண், பெண் காவலா்கள் சீருடையிலும், சாதாரண உடையிலும் வியாழக்கிழமை மாலை முதலே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நள்ளிரவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பொது இடங்களில் கேக் வெட்டவோ, பட்டாசு வெடிக்கவோ, ஒலிபெருக்கி வைக்கவோ கூடாது என காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

வழக்கமாக புத்தாண்டு தினத்தன்று இரவில் இளைஞா்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதும், பைக் ரேஸில் ஈடுபடுவதும் உண்டு. அவ்வாறு பைக் ரேஸில் ஈடுபடுவோரைத் தடுக்கும் நோக்கில் வேலூா் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 206 இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் 3,000 போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

அதன்படி, சாலைகளில் அதிவேகமாகவும், குடிபோதையிலும் வாகனங்களை இயக்கிய 333 பேரின் இரு சக்கர வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். ஓரிரு நாள் விசாரணைக்குப் பிறகு அந்த வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com