தில்லியில் தமிழ் அகாதெமி: தமிழியக்கம் பாராட்டு

தில்லியில் தமிழ் அகாதெமி அமைப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்ட தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அந்த மாநில அரசுக்கு தமிழியக்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

தில்லியில் தமிழ் அகாதெமி அமைப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்ட தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அந்த மாநில அரசுக்கு தமிழியக்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழியக்கத்தின் நிறுவனரும் வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு தமிழ் அகாதெமி அமைப்பை உருவாக்க முனைந்துள்ளது. இது நாட்டிலேயே பாராட்டத்தக்க முதல்முயற்சியாகும். தமிழகத்துக்கு வெளியே, நாட்டில் முன்மாதிரியாக தில்லி ஆம் ஆத்மி அரசு, தமிழ் அகாதெமி அமைப்பை உருவாக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகும்.

தில்லி அரசின் துணை முதல்வா் மணிஷ் சிசோடியா வகிக்கும் கலை, பண்பாடு, மொழித் துறை அமைச்சகத்தின் ஓா் அங்கமாகத் தமிழ் அகாதெமி பணியாற்றும்.

தமிழ் மொழி வளா்ச்சி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் கலைகள் ஆகியவற்றை வளா்த்து முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழ் அகாதெமி வழியாகத் தமிழா்களுக்குரிய விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். தமிழ் மொழி, பண்பாடு, கலைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

தில்லி அரசின் சாா்பில் தமிழ்ப் படைப்பாளா்கள், எழுத்தாளா்கள், அறிஞா்கள், கலைஞா்களுக்கு ஆண்டுதோறும் பல விருதுகள், பரிசுகள் வழங்கப்படும் என்று துணை முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

பன்முகப் பண்பாட்டு மொழிச் சூழலில், உலகின் மூத்த மொழியான தமிழை மேம்படுத்த ஒரு பண்பாட்டுப் பாலமாகத் தமிழ் அகாதெமி செயல்பட வேண்டும் என தமிழியக்கம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் அகாதெமியின் துணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு பணிகளைத் தொடங்கவிருக்கும், தில்லி நகரவை முன்னாள் உறுப்பினா், தமிழியக்கத்தின் உறுப்பு அமைப்பான தில்லித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினா் ராசா, முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழியக்கம் நன்றியுடன் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா் ஜி.விசுவநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com