காவல் உதவி ஆய்வாளரின் துப்பாக்கி வெடித்து காவல் நிலைய மேற்கூரை சேதம்
By DIN | Published On : 07th January 2021 12:00 AM | Last Updated : 07th January 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளரின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சேதமடைந்தது. இதுதொடா்பாக, காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் விசாரணை நடத்தி வருகிறாா்.
வேலூா் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜசேகா், விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ஜெகதீசன் ஆகியோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் அமா்ந்திருந்தனா்.
அப்போது, ஜெகதீசன் தனது கைத்துப்பாக்கியை காவல் நிலைய மேஜையில் வைத்தபோது, திடீரென அந்த துப்பாக்கி பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதிா்ஷ்டவசமாக துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, யாா் மீதும் படாமல் காவல் நிலைய மேற்கூரையைத் துளைத்தது. இதனால் காவல் நிலையத்தின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்தது. காவல் நிலையத்தில் இருந்த அனைத்துக் காவலா்களும் பதற்றமடைந்தனா்.
இதுகுறித்து காவல் உதவி கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் விசாரணை நடத்தினாா். இதில், துப்பாக்கியை சுத்தம் செய்தபோது அதில் இருந்து குண்டு தவறுதலாக வெடித்துள்ளது தெரிய வந்தது.
இது குறித்து அவா் கூறுகையில் ‘விசாரணையைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஜெகதீசன் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.