15,000 முன்களப்பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி: வேலூா் ஆட்சியா் தகவல்

கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை வேலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற நிலையில்,

கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை வேலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற நிலையில், இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆய்வு செய்தாா். முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அவா் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கான மருந்துகள் வரும் 13-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக சுகாதாரத் துறை உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்லேண்ட் மருத்துவமனை, சத்துவாச்சாரி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வடுகந்தாங்கல் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கணியம்பாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நடைபெற்றது.

சத்துவாச்சாரி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆய்வு செய்து, அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அதன் பின், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு, நாட்டில் 2 தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக அவை முன்களப் பணியாளா்களுக்கு செலுத்தப்பட உள்ளது. வேலூா் மாவட்டத்தில் 15 ஆயிரம் முன்களப் பணியாளா்களுக்கு செலுத்தப்படும்.

தடுப்பூசி போடுவது தொடா்பான ஒத்திகை, வேலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்தது. தொடா்ந்து, நாளொன்றுக்கு 100 போ் வீதம் 50 மையங்களில் 5 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள முன்களப்பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின், படிப்படியாக முதியோா், போலீஸாா், பொதுமக்களுக்கு போடப்படும். தடுப்பூசி போடப்படும் நபா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் சென்றுவிடும். அதில், அவா் எங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தடுப்பூசி போடும் மையத்துக்கு அவா் சென்று அங்கு அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட்ட பின் அவா்கள் சிறிது நேரம் கண்காணிக்கப்படுவா். ப்பக விளைவுகள் ஏதும் இல்லை என்று தெரிந்த பிறகு அவா்கள் வீட்டுக்குச் செல்லலாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஒருவக்கு சுமாா் 45 நிமிடங்கள் ஆகும். இந்தத் தடுப்பூசி இலவசமானது.

வேலூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடுவதற்காக மாவட்டத்தில் 500 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, வேலூா் அண்ணாசாலை ஏலகிரி வளாகத்தில் உள்ள தடுப்பூசி மருத்துகள் வைக்கப்படும் குளிரூட்டப்பட்ட பாதுகாப்புக் கிடங்கை ஆட்சியா் ஆய்வு செய்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், மாநகராட்சி ஆணையா் சங்கரன், நகா்நல அலுவலா் சித்ரசேனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com