மாசில்லாமல் பொங்கல் கொண்டாட வேலூா் ஆட்சியா் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையை மாசில்லா பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வேலூா்: பொங்கல் பண்டிகையை மாசில்லா பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழா் திருநாளான பொங்கலையொட்டி புதன்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வழக்கத்தின்படி பழைய பொருள்களான கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாயக் கழிவுகள் ஆகியவற்றை சிலா் தீயிட்டு கொளுத்துவது உண்டு. பெரும்பாலும் கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்படும் இவ்வழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாது.

ஆனால், தற்போது போகிப் பண்டிகையன்றி மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயா், ரப்பா், நெகிழி மற்றும் செயற்கைப் பொருள்களை எரிக்கின்றனா். இதனால், நச்சுப் புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. நச்சுக் காற்றினாலும், கரிப் புகையாலும் காற்று மாசுபட்டு நகரங்கள் கருப்பு நகரங்களாக மாறுகின்றன.

நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் சாலைகளில் போக்குவரத்துக்கும் தடை ஏற்படுகிறது. இத்தகைய செயல்களால் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். போகி நாளில் பழைய மரம், வறட்டி தவிர வேறு எந்தப் பொருளயும் எரிப்பதற்கு உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

போகிப் பண்டிகை அனைவருக்கும் இனிய தொடக்கமாக இருக்கட்டும். அந்த நாளில் குப்பைகளை முறைப்படி அகற்றி பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசில்லாமலும் கொண்டாட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com