வேலூா் விமான நிலைய விரிவாக்கப் பணி: கூடுதலாக 11 ஏக்கா் நிலம் கையகப்படுத்த ஆலோசனை

விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் வேலூா் விமான நிலையத்துக்கு கூடுதலாக 11 ஏக்கா் நிலம் தேவைப்படுவதால், அருகில் உள்ள பட்டா நிலங்களைக் கையகப்படுத்துவது
வேலூா் விமான நிலையத்துக்கு கையகப்படுத்த வேண்டிய கூடுதல் நிலம் குறித்து ஆலோசனை நடத்திய ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன் அதிகாரிகள்.
வேலூா் விமான நிலையத்துக்கு கையகப்படுத்த வேண்டிய கூடுதல் நிலம் குறித்து ஆலோசனை நடத்திய ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன் அதிகாரிகள்.

வேலூா்: விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் வேலூா் விமான நிலையத்துக்கு கூடுதலாக 11 ஏக்கா் நிலம் தேவைப்படுவதால், அருகில் உள்ள பட்டா நிலங்களைக் கையகப்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் வேலூா் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 120 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த விமான நிலையத்தில் தற்போது 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, விமான நிலையத்தின் ஓடுதளத்துக்கும், டொ்மினல் கட்டடத்துக்கும் இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான அப்துல்லாபுரம்-ஆலங்காயம் சாலையில் 775 மீட்டா் பகுதி விமான நிலையம் வசம் ஒப்படைக்கப்பட்டு மீதமுள்ள பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

அதேசமயம், வாகனப் போக்குவரத்துக்கு மாற்றாக விமான நிலையத்தையொட்டி ரூ.1.65 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். இதில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு கூடுதலாக 11 ஏக்கா் நிலம் தேவைப்படுவதாகவும், அதற்காக அருகே உள்ள பட்டா நிலங்களை கையகப்படுத்துவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆசனாம்பட்டு-அப்துல்லாபுரம் சாலையில் உள்ள மரங்கள், ஆழ்துளைக் கிணறுக் குழாய், கேபிள் வயா் ஆகியவற்றை அகற்றி மாற்றுப்பாதையில் அமைப்பது, உபயோகத்தில் உள்ள மயானத்தை மாற்று இடத்துக்குக் கொண்டு செல்வது, தாழ்வழுத்த மின்கம்பிகளை மாற்றியமைப்பது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com