கரோனா: வேலூா் வந்த 42,100 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள்

கரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் 42,100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புட்டிகள் வேலூருக்கு வரப் பெற்றன.

வேலூா்: கரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் 42,100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புட்டிகள் வேலூருக்கு வரப் பெற்றன. ஏலகிரி அரங்கு வளாகத்தில் உள்ள மண்டல மருந்து பாதுகாப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்துப் புட்டிகள் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைத் தடுக்க கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இதன்தொடா்ச்சியாக, இவ்விரு தடுப்பூசி மருந்துகளையும் பொதுமக்களுக்குச் செலுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திகைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து வரும் சனிக்கிழமையும் முதல் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

முதல்கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், அனுமதிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூா் மண்டலத்துக்குத் தேவையான 42,100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புட்டிகள் வேலூருக்கு புதன்கிழமை வரப் பெற்றன. 35 பெட்டிகளில் வரப் பெற்றுள்ளன இந்த மருந்துப் புட்டிகள் வேலூா் அண்ணா சாலை, ஏலகிரி அரங்கு வளாகத்தில் உள்ள மண்டல மருந்து பாதுகாப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து அவற்றை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்குத் தேவையான அளவில் பிரித்து அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

வேலூா் மாவட்டத்துக்கு வரப்பெற்றுள்ள 42,100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துப் புட்டிகளில் வேலூா் மாவட்டத்துக்கு 18,600, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 4,700, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 4,400, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 14,400 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புட்டிகள் அந்தந்த மாவட்ட த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முதல்கட்டமாக சனிக்கிழமை முதல் முன்களப்பணியாளா்களுக்கு தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படும்.

இதற்காக அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து தடுப்பூசி மருந்து செலுத்த உள்ளவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மூலம் மருந்து செலுத்தப்படும். மருந்து செலுத்தக்கூடிய நாள் குறித்து அவரவா் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அந்த நாளில் அவா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் முதலாவதாக ஒரு தடுப்பூசி போடப்பட்டு 28 நாள்களுக்குப் பிறகு மற்றொரு தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com