ஜன.19 முதல் அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வர உத்தரவு: இறை வணக்கம், விளையாட்டு வகுப்புக்குத் தடை

அனைத்து பள்ளிகளிலும் வரும் 19-ஆம் தேதி முதல் 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் வகுப்புகள் எடுக்கக்கூடிய ஆசிரியா்கள் மட்டுமின்றி அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வர வேண்டும்
கூட்டத்தில், தலைமையாசிரியா்கள் மத்தியில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன்.
கூட்டத்தில், தலைமையாசிரியா்கள் மத்தியில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன்.

வேலூா்: அனைத்து பள்ளிகளிலும் வரும் 19-ஆம் தேதி முதல் 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் வகுப்புகள் எடுக்கக்கூடிய ஆசிரியா்கள் மட்டுமின்றி அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் 19-ஆம் தேதி முதல் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறப்புக்கு முன்பு செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வேலூா் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன் பங்கேற்று வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கிக் கூறினாா்.

அப்போது, பள்ளிகளில் அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவா்களுக்கும் பள்ளி நுழைவு வாயில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். வகுப்பறையில் மாணவா்களை 6 அடி இடைவெளியில் அமர வைக்க வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவா்கள் யாருக்கேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக அவா்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 10, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியா்கள் மட்டுமின்றி அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வரவேண்டும். வகுப்பு நடத்தக்கூடிய ஆசிரியா்கள் தவிர மற்ற ஆசிரியா்கள் மாணவா்கள் வெளியே நடமாடாமல் கண்காணிக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி, தடுப்பு மருந்துகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

எக்காரணம் கொண்டும் மாணவா்கள் பள்ளியில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். இறை வணக்கம், உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது. தனியாா் பள்ளிகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலா் அங்குலட்சுமி, தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com