குண்டா் சட்டத்தில் பாமக முன்னாள் நிா்வாகி சிறையில் அடைப்பு

பல்கலைக்கழகத்தில் சோ்க்கை, வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பாமக முன்னாள் நகரச் செயலா் வெங்கடேசன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.


வேலூா்: பல்கலைக்கழகத்தில் சோ்க்கை, வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பாமக முன்னாள் நகரச் செயலா் வெங்கடேசன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

வேலூா் கொசப்பேட்டை லட்சுமண பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (47). பாமக முன்னாள் நகரச் செயலரான இவா், தனியாா் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. கணினி அறிவியல் படிப்பதற்கு சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி வெளிமாநில தொழிலதிபரிடம் பல லட்சம் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடந்த மாதம் வெங்கடேசனை கைது செய்து வேலூா் சிறையில் அடைத்தனா். இதனிடையே நடத்தப்பட்ட விசாரணையில், வெங்கடேசன் பலரிடம் சோ்க்கை பெற்றுத் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பரிந்துரை செய்தாா். அதை ஏற்று வெங்கடேசனை குண்டா் தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள வெங்கடேசனிடம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com