வேலூா்: களைகட்டியது பொங்கல் பொருள்களின் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூரில் பானைகள், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்ள்களின் விற்பனை களைகட்டியது. இதனால், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பொங்கலையொட்டி, வேலூருக்கு விற்பனைக்கு வந்திருந்த கரும்புக் கட்டுகள்.
பொங்கலையொட்டி, வேலூருக்கு விற்பனைக்கு வந்திருந்த கரும்புக் கட்டுகள்.

வேலூா்: பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூரில் பானைகள், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்ள்களின் விற்பனை களைகட்டியது. இதனால், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் அனைத்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டு வேலூரில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகளும் அதிக அளவில் வந்துள்ளன. பூஜைப் பொருள்களையும், காய்கறிகளையும் வாங்குவதற்கு வேலூா் கடை வீதிகளில் புதன்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, கடைகள் நிறைந்த பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, மாநகராட்சி சாலை, ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் பெருமளவில் குவிந்து பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

பொங்கல் பொருள்களின் விலை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு ரூ.80-க்கு விற்கப்பட்ட ஒரு ஜோடி கரும்பு இந்த ஆண்டும் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்கப்பட்டது. பொங்கல் பானைகள் சிறியது ரூ. 60 என்ற விலையிலும், பெரியது ரூ.300 வரையிலும் விற்கப்படுகின்றன.

மேலும், பொங்கலையொட்டி காய்கறிகள், பூக்கள், பழங்கள், வாழை இலை ஆகியவையும், மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்கத் தேவையான மணிகள், கயிறுகள் ஆகியவற்றின் வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் வைக்கும் இடத்தில் கோலம் போடுவதற்கான வண்ண வண்ண கோலப்பொடிகளும், மண் பானைகளும் விற்பனை செய்யப்பட்டது.

பொங்கலையொட்டி வழக்கத்தைவிட கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வரப் பெற்றிருந்ததால் அவற்றின் விலையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அதன்படி, தக்காளி கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.50, பீன்ஸ் ரூ. 40, கேரட் ரூ.30, அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.40, வள்ளிக்கிழங்கு ரூ.20, கருணைக்கிழங்கு ரூ.20, சேப்பங்கிழங்கு ரூ. 30, வள்ளிக் கிழங்கு ரூ.50-க்கு விற்பனையானது. பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் கடை வீதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற போகி பண்டிகையையொட்டி, அதிகாலை வேளையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த தேவையில்லாத பழைய பொருள்களை தீயிட்டு எரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com