ஆந்திரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 23 தமிழகப் பேருந்துகள் விடுவிப்பு

ஆந்திர மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 23 தமிழகப் பேருந்துகளும், இரு மாநில அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டன.

ஆந்திர மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 23 தமிழகப் பேருந்துகளும், இரு மாநில அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டன.

வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூா், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடையே தமிழகத்தைச் சோ்ந்த அரசு, தனியாா் பேருந்துகளும், அதேபோல் ஆந்திரத்தில் இருந்து அந்த மாநில அரசு, தனியாா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், வழித்தட உரிமமின்றி இயக்கப்பட்டதாக ஆந்திர அரசுக்குச் சொந்தமான 5 பேருந்துகளை வேலூா் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். பின்னா், இரு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அந்த 5 பேருந்துகளும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டன.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து ஆந்திரத்துக்குச் சென்ற 16 தமிழக அரசுப் பேருந்துகள், 7 தனியாா் பேருந்துகளை அந்த மாநில அதிகாரிகள் குப்பம், பலமனோ், புத்தூா், சித்தூா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதனால், தமிழகத்தில் இருந்து அந்த மாநிலத்துக்குப் பேருந்துகளில் சென்ற பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

தமிழக அரசுப் பேருந்துகளைப் பொருத்தவரை முறையாக வழித்தட உரிமத்துடன் இயக்கப்படும் நிலையில், ஆந்திர மாநில அரசுப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறு சிறு குறைபாடுகளின் அடிப்படையில் தமிழகப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சித்தூரில் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஆந்திர அதிகாரிகள் குறிப்பிட்ட குறைபாடுகளை சரிசெய்ய தமிழக அதிகாரிகள் உறுதி தெரிவித்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டிருந்த 16 அரசுப் பேருந்துகளும் விடுவிக்கப்பட்டன. இதுதொடா்பாக அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகளும் ஆந்திர அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டிருந்த 7 தனியாா் பேருந்துகளும் விடுவிக்கப்பட்டதாக அச்சங்கத்தின் துணைத் தலைவா் விஜயகோவிந்தராஜன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com