போலீஸ் மோப்ப நாய் சன்னி புற்றுநோயால் பலி

வேலூா் மாவட்டக் காவல் துறையின் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வந்த சன்னி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தது.
உயிரிழந்த மோப்ப நாய் சன்னி.
உயிரிழந்த மோப்ப நாய் சன்னி.

வேலூா் மாவட்டக் காவல் துறையின் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வந்த சன்னி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தது. அதன் உடலை போலீஸாா் நல்லடக்கம் செய்தனா்.

வேலூா் மாவட்டக் காவல் துறையின் மோப்ப நாய் பிரிவில் சிம்பா, சன்னி, லூசி, அக்னி என்ற 4 மோப்ப நாய்களை வழக்குகளில் துப்பு துலக்க போலீஸாா் பயன்படுத்தி வருகின்றனா். இதில் சன்னி, சிம்பா கொலை, கொள்ளை சாா்ந்த குற்ற வழக்குகளில் தடயங்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மோப்ப நாய் சன்னிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவா்கள், மோப்ப நாய் சன்னிக்கு வாயில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சன்னியை சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னா் வேலூா் கொண்டு வரப்பட்டு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சன்னியால் சரிவர சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அதற்கு பால், பிஸ்கெட் போன்றவை ஊட்டி வந்தனா். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சன்னி சனிக்கிழமை உயிரிழந்தது. தொடா்ந்து அதன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மோப்ப நாய் பிரிவுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு சன்னி குட்டியாக கொண்டுவரப்பட்டது. அப்போது வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பகலவன் இதற்கு சன்னி என பெயரிட்டாா். பல்வேறு வழக்குகளில் துப்பு துலங்க சன்னி மோப்ப நாய் பெரும் உதவி புரிந்துள்ளது. கடந்த ஆண்டு உமராபாத்தில் நடந்த கொலை வழக்கு, விருதம்பட்டு வீட்டில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் சன்னியின் பங்கு முக்கியமாக இருந்தது.

இதற்கு பதிலாக புதிதாக மோப்ப நாய் ஒன்று வாங்கி பயிற்சி அளிக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com